கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் பொதுவாகவே பெண்களுக்கு தினசரி வேலைகளை செய்யலாமா? மாடி படிகளில் ஏறி இறக்கலாமா? உடற்பயிற்சி செய்யலாமா என பல சந்தேகங்கள் அவர்களுக்கு எழுகின்றன. இது பெரும்பாலான பெண்களின் முதல் கர்ப்பத்தில் ஏற்படும் பொதுவான சந்தேகமாக இருக்கிறது. அதில் சில பொதுவான கேள்விகளையும், பதில்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி.

மாடி படிகளில் ஏறி இறக்கலாமா?
தாராளமாக மாடி படிகளில் ஏறி இறங்கலாம். ஆனால் முடிந்தவரை மிகவும் கவனமாக மெதுவாகவும் ஏறி இறக்க வேண்டியது அவசியம்.
தினசரி வேலைகளை செய்யலாமா?
கண்டிப்பாக தினசரி வேலைகளை செய்யலாம். எதையும் கவனத்துடன் நிதானமாக தடுமாற்றம் இல்லாமல் செய்யலாம்.
வீட்டில் கட்டில் இல்லை, தரையில் படுத்து உறக்கலாமா?
நிச்சியமாக தரையில் படுத்து உறங்கலாம். எழும் போது கவனமாக இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்யலாமா?
உடற்பயிற்சிகள் செய்யலாம். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஏற்றார்ப்போல் ஒவ்வொருவரின் உடல்நிலை பொறுத்து மாறும்.முதல் மூன்று மாத காலத்தில் வாக்கிங், ஸ்ட்ரெட்சஸ் போன்ற பயிற்சிகளை செய்யலாம். அடுத்த மூன்று மாதங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளின் படி அதற்கேற்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
யாரெல்லாம் உடற்பயிற்சி செய்யக்கூடாது?
கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் இரத்தப்போக்கு உள்ளவர்கள், முதல் குழந்தை குறை பிரசவத்தில் பெற்றவர்கள், நஞ்சுக்கொடி கர்ப்பப்பை வாய் அருகே இருப்பவர்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. பிரசவ காலம் வரை மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றுவது நல்லது.
கர்ப்பகாலத்தில் கட்டாயம் போட வேண்டிய ஊசிகள்
கர்ப்பகாலத்தில் சில ஊசிகளை போட வேண்டியது அவசியமாகிறது. அதில் முக்கியமாக TT(Tetanus Toxoid) ஊசியை ஒன்றரை மாத இடைவெளியில் இரண்டு முறை போட வேண்டும். அதைத்தொடர்ந்து மூச்சுத்திணறல் மற்றும் நிமோனியாவைத் தடுக்க 7 வது மாதத்திற்கு பிறகு இன்ப்ளுயன்சா ஊசி போட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகள்
கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை உணவு வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்பமான முதல் மூன்று மாதத்திற்குள் ஏன் ஸ்கேன் எடுக்க வேண்டும்?
கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் அனைத்து மருத்துவர்களும் பரிந்துரைப்பது ஸ்கேன் எடுக்க வேண்டுமென்பதுதான். அது ஏன் என்று எப்போதாவது கேட்டுள்ளீர்களா? அதற்கான அவசியம் என்னவெனில், கர்ப்பப்பையில் குழந்தை சரியான பொசிஷனில் உள்ளதா, குழந்தைக்கு இதயத் தடிப்பு சரியாக வந்துவிட்டதா, குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தையின் அளவை தெரிந்து கொண்டு பிரசவ தேதியைக் கணக்கிட மற்றும் கருப்பையில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முதல் மூன்று மாதத்திற்குள் ஸ்கேன் செய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்தில் மருத்துவரிடம் அவசியம் கேட்க வேண்டிய கேள்விகள்
1. கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை அதிகரிப்பது நல்லது?
2. கர்ப்ப காலத்தில் அலுவலக வேலைகளை செய்யலாமா?
3. உடல்நல பிரச்சினைகளுக்கு மெடிக்கல் ஷாப் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா?
4. கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா?
5. கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா?
இதற்கான பதில்கள் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தைப் பொறுத்து வேறுபடலாம். எனவே உங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு உங்கள் மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடப்பது உங்களுக்கு பாதுகாப்பான கர்ப்ப காலத்தை உறுதிசெய்யும்.